கனடாவாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தூதரகம்!
கனேடிய நகரமொன்றில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ரொரன்றோவிலுள்ள இந்திய தூதரகம் கனடாவாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
கனடாவின் Nova Scotiaவிலுள்ள Truro நகரில், Prabhjot Singh Katri (23) என்ற இந்திய மாணவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் , சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனினும் இது இன ரீதியான தாக்குதல் என இந்தோ கனேடிய சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, Ottawaவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகம், இந்தியர்களின் பாதுகாப்பை, குறிப்பாக இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கனடா அரசை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் உயிரிழந்த மாணவரின் உடலை இந்தியா அனுப்ப அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்துள்ள ரொரன்றோவிலுள்ள இந்திய தூதரகம், இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.
மேலும் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டமில்லாத இடங்களுக்கு தனியாக செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய தூதரகம், சந்தேகத்துக்குரிய மற்றும் இனவெறுப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிட்டால் உடனடியாக உள்ளூர் பொலிசாரிடம் புகாரளிக்குமாறும் கனடாவாழ் இந்தியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.