முதியவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் நூதன மோசடி குறித்து எச்சரிக்கை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம மிசிசாகாவில் வசிக்கும் ஒரு வயோதிப பெண், கூரை பழுது செய்வதாக கூறி நடந்த மோசடி முயற்சியில் இருந்து தப்பித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில், அவர் மொத்தம் 34,000 டொலர்கள் வரை இழக்க நேரிடும் அபாயத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெஸ்லி பென்ட்லி (Leslie Bentley) என்பவர், புத்தாண்டுக்கு முன்பு, ஒருவர் தனது வீட்டின் கதவைத் தட்டி, “உங்கள் கூரைக்கு பழுது பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. நாங்கள் இந்தப் பகுதியில் வேலை செய்து வருகிறோம்; உதவி செய்யலாம்” என்று கூறியதாக தெரிவித்தார்.

கூரை சற்று பழையது என்பதனால் அவர் அந்த நபரின் பேச்சை நம்பி பழுது பார்க்க ஒப்புக்கொண்டதாக கூறினார்.
அந்த நபர் முதலில் 7,000 டொலர் கேட்டு, உடனடியாக பணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக பென்ட்லி கூறினார். இதையடுத்து அவர் வங்கிக்குச் சென்று அந்தத் தொகையை எடுத்துக் கொடுத்துள்ளார்.
ஆனால், கூரையின் மீது ஏறிச் சென்ற பின்னர், அந்த நபர் கூரை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறி, மேலும் 27,000 டொலர் செலுத்த வேண்டும் என கேட்டதாக பென்ட்லி தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் தனது மகளிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டதாகவும் அதன் பின்னரே இது மோசடி என்பது தெரிநத்தாகவும் பென்ட்லி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.