கனடாவின் முன்னாள் அமைச்சர் ஜோடி வில்சன்–ரேபோல்ட் புற்று நோயினால் பாதிப்பு
கனடாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஜோடி வில்சன்–ரேபோல்ட், தமக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சையை விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகே இந்த சிகிச்சை தொடங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலைமை “பயமூட்டும் மற்றும் மனதை கலங்கடிக்கும் ஒன்று” என அவர் குறிப்பிட்டாலும், கடந்த ஆண்டுகளில் பலர் தம்முடன் பகிர்ந்த தைரியம் மற்றும் குணமடைந்த அனுபவக் கதைகளிலிருந்து தாம் வலிமை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது அறுவை மருத்துவர்களுக்கும், பிரிட்டிஷ் கொலம்பியா புற்றுநோய் நிறுவனம் (BC Cancer Agency) வழங்கிய பராமரிப்பிற்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அதே பதிவில், பொதுமக்கள் தவறாமல் முறையான மார்பகப் பரிசோதனைகள் (mammogram) செய்து கொள்ள வேண்டும் என்றும், பிற புற்றுநோய்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகளுக்கான பரிசோதனைகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் ஜோடி வில்சன்–ரேபோல்ட் வலியுறுத்தியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான முன்னாள் லிபரல் அரசில், மூன்று ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் பணியாற்றிய ஜோடி வில்சன்–ரேபோல்ட், அதன் பின்னர் பதவி விலகினார்.
2019 பொதுத் தேர்தலில், வான்கூவர் தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.