நிறைவேற்று அதிகாரிகளை பொதி சுமக்கச் சொல்லும் விமானசேவை நிறுவனம்
உலகின் முதனிலை விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான அவுஸ்திரேலியாவின் குவான்டாஸ் விமான சேவை நிறுவனம் சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரிகளை பொதி சுமக்கும் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது.
விமான நிலையத்தில் பொதிகளை சுமத்தல், அவற்றை கையாளுதல் உள்ளிட்ட பணிகளை செய்யும் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் உயர் பதவிகளை வகித்து வரும் சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரிகள் இவ்வாறு பொதிகளை சுமப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதிக்கு இவ்வாறு நிறைவேற்று அதிகாரிகள் பொதிகளை சுமத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மெல்பர்ன் மற்றும் சிட்னி ஆகிய விமான நிலையங்களில் இந்த நிறைவேற்று அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவிட் பெருந்தொற்று உள்ளிட்ட நோய்கள் காரணமாகவும் வேறும் காரணிகளினாலும் விமான சேவை நிறுவனத்தில் கடுமையான ஆளணி வளப்பற்றாக்குறை நிலை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதிகளை ஸ்கேன் செய்தல், அவற்றை சுமந்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த நிறைவேற்று அதிகாரிகள் தற்காலிக அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்