சுவிட்சர்லாந்தில் நீர்மின் நிலையத்தில் வெடிவிபத்து
தெற்கு சுவிட்சர்லாந்தின் டிசினோ பகுதியில் அமைந்துள்ள ரிடோம் நீர்மின் நிலையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பியோட்டா கிராமத்தில் அமைந்துள்ள இந்த நீர்மின் நிலையத்தில் காலை சுமார் 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது இரண்டு தொழிலாளர்கள் கட்டிடத்துக்குள் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிவிபத்தில் கட்டிடம் கடுமையாக சேதமடைந்ததுடன், அங்கு சிக்கியிருந்த இரு தொழிலாளர்களும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அவர்கள் சிகிற்சை பலனின்றி உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 55 வயதுடைய சுவிஸ் குடிமகன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மற்றைய தொழிலாளரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
சம்பவத்திற்கான காரணம் குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தீ விபத்துக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்புக்கும் வழிவகுத்த காரணிகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவிஸ் இரயில்வே நிறுவனமான SBB-க்கு சொந்தமான இந்த வளாகம், சுமார் 100 ஆண்டுகள் பழமையான நீர்மின் நிலையத்தை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது புனரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.