பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பணம் பறிக்கும் கும்பல் வெறித்தனம்; அச்சத்தில் Surrey நகர மக்கள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே (Surrey) நகரம் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்களின் அச்சுறுத்தலால் உறைந்து போயுள்ள நிலையில், அந்தக் கும்பலின் வெறிச்செயலால் முதல் நபர் காயமடைந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை, 103-A அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு பெண்மணியைச் சுட்டுக் காயப்படுத்தினர்.
தெற்காசிய சமூகத்தினர் மத்தியில் பதற்றம்
சுடப்பட்ட அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வருவதாக சர்ரே காவல்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பெண்மணி சுடப்பட்ட சம்பவம், மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்றும், இந்த வன்முறையால் காயமடைந்த முதல் நபர் இவர் தான் என்றும் காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
பணம் கேட்டு அச்சுறுத்தும் இக்கும்பல்கள், தங்கள் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாதவர்களைக் குறிவைத்துத் தாக்குவதைத் தற்போது தொடங்கியுள்ளன.
இதனால், கனடாவில் வாழும் குறிப்பாகத் தெற்காசிய சமூகத்தினர் மத்தியில் ஒருவிதப் பதற்றம் நிலவுகிறது.
Surrey பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதோடு, பணம் கேட்டு மிரட்டப்படும் எவரும் உடனடியாகப் புகார் அளிக்குமாறு எச்சரித்துள்ளது.