டொரொன்டோவின் வீட்டு வாடகை சந்தையில் சரிவு
டொரொன்டோவில் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை சந்தை மெதுவாகவே சரிவடைந்து வந்த நிலையில், இப்போது அதில் சிறிய நிவாரண அறிகுறிகள் தோன்றத் தொடங்கியுள்ளன.
Rentals.ca மற்றும் Urbanation ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, டொரொன்டோவில் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிட்டால் வீட்டு வாடகைச் செலவுகள் சராசரியாக 7% குறைந்துள்ளன.
இது தொடர்ந்து 14வது மாதமாக வாடகை விலைகள் ஆண்டுக்கு ஆண்டாக குறைவடையும் நிலையை காட்டுகிறது.
தற்போது, நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி வாடகை 2,589 டொலராக காணப்படுகின்றது என்பதுடன், இது கடந்த 32 மாதங்களில் பதிவான மிகவும் குறைந்த தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
டொரொன்டோ வீட்டு மனை சபை Toronto Regional Real Estate Board (TRREB) வெளியிட்டுள்ள தகவலின் படி, டொரொன்டோவில் கொண்டோ விற்பனைகள் கடந்த ஏப்ரலுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு ஏப்ரலில் 30% வீதத்தை விட அதிகமாக குறைந்துள்ளன.
இந்த சந்தை மாற்றத்தால் வாடகையாளர்களுக்கு சில புதிய சலுகைகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
குறைந்த வாடகைக் காலங்கள், இலவச வாடகை மாதங்கள், அல்லது ஏற்கெனவே வழங்காத சலுகைகள் போன்றவை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.