லிபரல் கட்சி சிறுபான்மை அரசாங்கம் அமைக்கும் சாத்தியம்
கனடாவில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை நிறுவக்கூடிய சாத்தியம் கிடையாது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி லிபரல் கட்சி தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் ஆட்சியை கைப்பற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் கடந்த இரண்டு தடவைகள் பொது தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி ஈட்டி இருந்தது.
கனடாவில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு 172 ஆசனங்களை கட்சி ஒன்று பெற்றிருக்க வேண்டும் என்ற இலக்கினை எட்ட முடியுமா என்பது சந்தேகம் என தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளின் பிரகாரம் லிபரல் கட்சி முன்னிலை வகிக்கின்றது.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் லிபரல் கட்சி 162 தொகுதிகளிலும் கான்சர்வேட்டிவ் கட்சி 149 தொகுதிகளிலும், புளொக் கியூபிகோ கட்சி 23 தொகுதிகளிலும் என்.டி.பி. கட்சி 8 தொகுதிகளிலும் பசுமை கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
மொத்தமாக 343 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லிபரல் கட்சி சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.