கனடாவில் எரிபொருள் வரி குறித்து வெளியான அறிவிப்பு
கனடா மத்திய அரசு அறிவித்திருந்த எரிபொருள் மீதான சில வரிகள் இடைநிறுத்தம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் சாதாரண ரக பெட்ரோல் (Regular Gasoline) லிட்டருக்கு 10 காசுகளும், டீசல் லிட்டருக்கு 4 காசுகளும் குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
பிரதமர் மார்க் கார்னி கடந்த வாரம் அறிவித்தபடி, இந்த கலால் வரி (Excise tax) இடைநிறுத்தம் எதிர்வரும் 'தொழிலாளர் தினம்' (Labour Day) வரை நீடிக்கும்.

பெட்ரோல் நிலையங்களில் அதிகரித்து வரும் விலையைக் கட்டுப்படுத்த இது ஒரு விவேகமான நடவடிக்கை என லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த வரிச் சலுகையினால் அரசுக்கு சுமார் 2.4 பில்லியன் டொலர் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போர் தொடுக்க எடுத்த முடிவைத் தொடர்ந்து, உலக சந்தையில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரானும் வாஷிங்டனும் மாறி மாறி கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தற்போது கனடா முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் சராசரியாக 1.74 டொலர் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 40 காசுகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை போதுமானதல்ல என்று கன்சர்வேடிவ் கட்சியினர் வாதிடுகின்றனர்.
எரிபொருள் வரி நீக்கத்தை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க வேண்டும் எனவும், தூய்மையான எரிபொருள் தரநிலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான கார்பன் வரி ஆகியவற்றை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.