பாகிஸ்தானின் பெண் பிரபல செய்தி வாசிப்பாளர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு
பாகிஸ்தானின் பிரபல செய்தி வாசிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ராபியா அசன் (Rabia Hassan), ராவல்பிண்டியில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தான் ஊடகத்துறையிலும் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) ராவல்பிண்டியின் குல்ஷனாபாத் (அடியாலா வீதி) பகுதியில் உள்ள அவரது வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ராபியாவின் கணவர் அஹ்சன் தாஹிர் கைது செய்யப்பட்டுள்ளார்.

படுக்கையறையிலிருந்து கேட்ட துப்பாக்கிச் சத்தம்
படுக்கையறையிலிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டதை அடுத்து, அங்கிருந்த தாயாரும் சகோதரிகளும் சென்று பார்த்தபோது ராபியா காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார்.
துப்பாக்கியில் தோட்டா இருந்தது தனக்குத் தெரியாது என்றும், அது தற்செயலாக வெடித்துவிட்டதாகவும் கணவர் அஹ்சன் தாஹிர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிக்கு உரிய அனுமதிப்பத்திரம் (License) அஹ்சன் தாஹிரிடம் இல்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராபியாவின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் அஹ்சன் தாஹிர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.