கனடாவில் ரயில் மோதி பெண் பலி!
கனடாவின் டொரொன்டோ நகரின் ஸ்கார்பரோ பகுதியில் புதன்கிழமை மாலை இலகுரக ரயில் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எக்லின்டன் அவென்யூ ஈஸ்ட் மற்றும் விக்டோரியா பார்க் அவென்யூ ஆகிய வீதிகள் சந்திக்கும் பகுதியில், மாலை 6:08 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக டொரொன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தண்டவாளத்தை வடக்கு நோக்கிக் கடக்க முற்பட்ட போதே, மேற்கு நோக்கிப் பயணித்த இலகுரக ரயில் அவர் மீது மோதியுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் சமிக்ஞை விளக்குகள் கொண்ட பாதசாரி கடவை இல்லாத பகுதியிலேயே அவர் வீதியைக் கடந்துள்ளதாகப் பொலிஸ் அதிகாரி ஜெஃப் அலிங்டன் சம்பவ இடத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த அப்பெண், உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இலகுரக ரயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமரா காட்சிகள் மற்றும் ரயிலின் வேகத்தைக் கண்டறியும் கணினித் தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம், விபத்துக்கான காரணம் மற்றும் தவறு யார் மீது உள்ளது என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்விபத்து காரணமாக லைன் 5 வழித்தடத்தில் ஸ்லோன் மற்றும் பார்மசி நிலையங்களுக்கு இடையிலான இலகுரக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பயணிகளுக்காக மாற்றுப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
இதேவேளை, புதன்கிழமை மாலை 5:11 மணி முதல் 6:08 மணி வரையான ஒரு மணி நேர இடைவெளியில் டொரொன்டோ நகரின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 5 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.