பங்களாதேஷ் டாக்கா விமான நிலையத்தில் பாரிய தீ விபத்து; விமான சேவைகள் ரத்து
பங்களாதேஷ் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தின் சரக்குப் பகுதியில் இன்று (18) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்து அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் நடந்ததாக, பிமான் பங்களாதேஷ் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கவுசர் மஹ்மூதை மேற்கோள் காட்டி டாக்கா செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து சென்னையில் இருந்து டாக்காவிற்குச் செல்லும் இண்டிகோ விமானம் கொல்கத்தாவிற்கு திருப்பி விடப்பட்டது. அதோடு பிமான் பங்களாதேஷ் விமானத்தின் மற்றொரு விமானம் ரத்து செய்யப்பட்டது.
சம்பவத்திற்குப் பிறகு, விமான நிலையத்தின் தீயணைப்புத் துறை, பங்களாதேஷ் விமானப்படை தீயணைப்புப் பிரிவு மற்றும் பிற சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவர ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.