கடந்த 14 மாதங்களில் முதல் முறையாக கொரோனா மரணம் பதிவாகாத நாள்!
இங்கிலாந்தில் கடந்த 14 மாதங்களில் முதல் முறையாக நேற்று ஒரு கொரோனா மரணம் கூட பதிவாகவில்லை என கூறப்படுகின்றது. இங்கிலாந்து நாடு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். சென்ற வருடம் மார்ச் முதல் அதாவது கிட்டத்தட்ட 14 மாதங்களாக இந்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தலைமையில் உள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. ஜனவரி மாதம் 70, 000 பேருக்குத் தினசரி பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அது 2000 ஆக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஊரடங்கு மற்றும் தடுப்பூசிகளே ஆகும் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மக்கள் தொகையில் அதிக சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வெகுநாட்களுக்கு முன்பே தடுப்பூசி போட தொடங்கிய நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். இதுவரை நாட்டு மக்களில் பாதிக்கு மேல் ஊசி போட்டு கொண்டுள்ளனர்.
நேற்று மாலை இங்கிலாந்து நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி 'கொரோனாவால் இதுவரை 1,12,245 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த நிலையில் 14 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக இங்கு ஒருவர் கூட கொரோனாவால் உயிர் இழக்கவில்லை. \
மேலும் இதைப் போல் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய இடங்களிலும் ஒருவர் கூட மரணம் அடையவில்லை' எனவும் கூறப்படுகின்றது.