பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதலில் மேலும் 5 பேர் பலி
பசிபிக் பெருங்கடலில் சந்தேகத்திற்குரிய கடல்வழி போதைப்பொருள் கடத்தலாளர்களை குறிவைத்து டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கையில் மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், கடந்த செப்டம்பரிலிருந்து இந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 104 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு பசிபிக் பகுதியில் உள்ள இரண்டு கப்பல்களை இலக்காகக் கொண்டு “மாரக கினெடிக் தாக்குதல்கள்” நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் வழங்கிய உத்தரவின் பேரில் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஒரு கப்பலில் மூன்று பேரும் மற்றொரு கப்பலில் இரண்டு பேரும் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
இதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை, சர்வதேச கடல் எல்லைக்குள் உள்ள மற்றொரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நாட்களில் நடந்த தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்க இராணுவம், இந்த உயிரிழந்தவர்கள் “ஆண் போதைப்பொருள்–தீவிரவாதிகள்” என கூறினாலும், கடந்த செப்டம்பரிலிருந்து பசிபிக் மற்றும் கரீபியன் கடல்களில் அழிக்கப்பட்ட சுமார் 30 கப்பல்கள் உண்மையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தன என்பதற்கான ஆதாரங்களை வாஷிங்டன் இதுவரை வெளியிடவில்லை.
இந்த தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.