நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 25 ஆக அதிகரிப்பு – 5 அதிகாரிகளும் 20 கைதிகளும் பலி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த வன்முறை மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக்கால ஊடக அறிக்கைகளின்படி, இன்றைய மோதல்களில் பலியான 25 பேரில் ஐந்து சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று காலை ஏற்பட்ட இந்த வன்முறையில் மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதன்படி, கடந்த இரண்டு நாட்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்று வரும் தொடர் வன்முறைச் சம்பவங்களில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 80 ஐக் கடந்துள்ளது.
நேற்று (05) பிற்பகல் விளக்கமறியல் கைதிகளுக்கும் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 38 பேர் காயமடைந்திருந்தனர்.
அந்தப் பதற்ற நிலைமையைத் தொடர்ந்து, இன்று காலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட நேரடித் தர்க்கம் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தீவிரமடைந்த இந்த வன்முறை நிலைமையை, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை வளாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.