அமெரிக்காவை உலுக்கிய பெரும் அனர்த்தம் ; 13 பேர் பலி, பல சிறுமிகள் மாயம்
டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் மாயமாகி உள்ளனர்.
அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பல சிறுமிகள் மாயம்
அமெரிக்காவில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், தென்-மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் முகாம் ஒன்று இருந்துள்ளது. இதனால் முகாமில் இருந்த 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
சான் அன்டோனியோவிலிருந்து வடமேற்கே சுமார் 105 கிமீ தொலைவில் உள்ள தென்-மத்திய டெக்சாஸ் ஹில் கன்ட்ரியில் அமைந்துள்ள கெர் கவுண்டியின் சில பகுதிகளுக்கு திடீர் வெள்ளம் காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
300 மி.மீ., வரை மழை பெய்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கவுண்டி தொகுதியான கெர்வில்லின் நகர மேலாளர் டால்டன் கூறியதாவது: எந்த வானிலை முன்னறிவிப்புமின்றி திடீரென கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் உள்ள முகாம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. டெக்சாஸ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.