உலகம் முழுவதும் மூன்று நாட்களில் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து!
உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள், உட்பட (டிசம்பர் 24, 25, 26) 3 நாட்களில் மட்டும் சுமார் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ‘பிளைட் அவேர்' என்கிற விமானம் தொடர்பான விவரங்களை வெளியிடும் வலைதளத்தின் தரவுகள் கூறுகின்றன.
இதேவேளை, உலகம் முழுவதும் இந்த பாதிப்பு இருந்தாலும் அமெரிக்கா மற்றும் சீனாவை சேர்ந்த விமான நிறுவனங்களே அதிக அளவில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ‘பிளைட் அவேர்' கூறுகிறது.
இந்த வகையில் அமெரிக்காவின் யூனைடெட், டெல்டா மற்றும் ஜெட்பூளு ஆகிய 3 விமான நிறுவனங்கள் 10 சதவீதத்துக்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்ததாக தெரியவந்துள்ளது.
விமானங்கள் இன்றும் ரத்து ஆக வாய்ப்பு
அமெரிக்காவில் கடந்த (24-12-2021) வெள்ளிக்கிழமை 690 விமானங்களும், சனிக்கிழமை (25-12-2021) சுமார் 1,000 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று 250-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேவேளை, இன்றும் 27-12-2021 (திங்கட்கிழமை) இது போல விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று, அதிக விமானங்களை ரத்து செய்தது, சீனாவைச் சேர்ந்த ‘சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம்தான்.
ஒரே நாளில் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 350-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது. பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (26-12-2021) ஒரே நாளில் 56 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இப்படி ஒட்டுமொத்தமாக உலக அளவில் வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரையில் சுமார் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.