கனடாவில் இந்தப் பகுதியில் விமானப் போக்குவரத்துப் பாதிப்பு
கனடாவின் கெலோனா பகுதியில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பிரிடிஷ் கொலம்பிய மாகாணத்தின் கெலோனா சர்வதேச விமான நிலையத்தை (YLW) சுற்றியுள்ள வான்வழி, தீவிரமாக பரவி வரும் காட்டு தீ காரணமாக மூடப்பட்டுள்ளது.
கிழக்கு கெலோனா பகுதியில் உள்ள எலிசன் (Ellison) மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக, அனைத்து வருகை மற்றும் புறப்பாட்டுச் சேவைகளையும் நிறுத்துமாறு பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீயணைப்பு பிரிவு உத்தரவிட்டது.
"நாங்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான புதுப்பிப்பு அறிவிப்புக்களை வழங்குவோம்," என விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாலை 5 மணிக்கு பின்னர் வெளியான புதுப்பிப்பு அறிக்கையின் படி, தீ பரவல் தற்போது இரண்டு ஹெக்டேரை கடந்துள்ளதாகவும், அது கட்டுப்பாடற்ற நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தீவிரமாக பரவும் இந்த தீ, மனிதச் செயலால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கிழக்கு பகுதியில் உள்ள போஸ்டில் ஏரி (Postill Lake) நோக்கி தீ பரவியதால், அதனை சுற்றியுள்ள ஏரிகள், குடில்கள் மற்றும் முகாம்கள் கூட அபாயத்திலுள்ளன.
எலிசன் Ellison பிரதேசத்திற்கு மேலுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு, முன்னெச்சரிக்கையாக வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
"பொதுமக்கள் எந்த வகையிலும் இந்த தீ பாதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்," என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.