புளோரிடா விமான விபத்தில் உயிரிழந்தோர் விபரங்கள் வெளியானது
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற தனியார் வானூர்தி விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களும் உயிரிழந்தோர் விபரமும் வெளியாகியுள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து பஹாமாஸ் நோக்கிப் பயணித்த லியர்ஜெட் 60 (Learjet 60) ரக தனியார் வானூர்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள்
புளோரிடாவின் பாம் பீச் பகுதிக்கு அருகில் வானூர்தி திடீரென வீழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், பாரிய வெடிப்பு மற்றும் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவர்களில் அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்பத் தொழில்முனைவோரான ஆடம் ரொபின்சன், அவரது மனைவி ஹெலன் ஷார்ப் மற்றும் அவர்களது இரண்டு சிறுவர்களும் அடங்குகின்றனர்.
உயிரிழந்த சிறுவர்கள் நான்கு வயதான எம்மா மற்றும் இரண்டு வயதான சார்லி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆடம் ரொபின்சன், RB2B மற்றும் Retention.com உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர்.
மனைவி ஹெலன் ஷார்ப் ஒரு கலைஞர் ஆவார். மேலும், வானூர்தியில் பயணித்த ரேச்சல் ரீட், சார்மி ஃபெர் மற்றும் சிறுவர்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அனிதா மரியா செட்டினா ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
வானூர்தியை செலுத்திய 55 வயதான ஜெஃப் கிரிகோரி மற்றும் 20 வயதான துணை விமானி நடாலியா ஃபில்குவேராஸ் ஆகியோரும் உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.
நடாலியா தனது 17 வயதில் விமானி உரிமத்தைப் பெற்றிருந்ததுடன், சிறுவயது முதலே விமானியாக வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வானூர்தியின் இறக்கைகளில் பனிப்படிவு ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான காற்றுக் கொந்தளிப்பு நிலவுவதாகவும் விபத்துக்கு முன்னர் விமானிகள் வானூர்திப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வானூர்தி வேகமாகத் தாழிறங்கியதுடன், விமானிகள் அவசர உதவி கோரும் சமிக்ஞையையும் விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மோசமான வானிலை, வானூர்தியின் இறக்கைகளில் ஏற்பட்ட பனிப்படிவு, காற்றுக் கொந்தளிப்பு மற்றும் மனிதத் தவறுகள் உள்ளிட்ட காரணிகள் விபத்துக்குப் பங்களித்தனவா என்பது குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புச் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் தங்களது குடும்பங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,தெரிவித்துள்ளனர்.