பிரித்தானியாவில் வெப்பமான நாள் குறித்த முன்னறிவிப்பு!
பிரித்தானியாவில் இந்த வாரத்தில் வசந்த காலத்தைப் போன்ற வெப்பமான வானிலை நிலவவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக ஆர்க்டிக் காற்றினால் நிலவி வந்த கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு மறைந்து, இந்த வாரம் முதல் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வீசும் வெப்பமான தெற்குக் காற்றினால், இன்று வெப்பநிலை இயல்பை விட 6 முதல் 7 பாகை செல்சியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வெப்பநிலை 20°C வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மார்ச் 5-ஆம் திகதி போர்த்மடோக் (Porthmadog) பகுதியில் பதிவான 17.8°C வெப்பநிலையை விட, இந்த வாரம் வேல்ஸ் பகுதியில் அதிக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
அதேபோல், லண்டனில் பதிவான இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையான 19.2°C-ஐயும் கடந்து, மிட்லண்ட்ஸ் அல்லது வடமேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 20°C-ஐ எட்டக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வானியல் ரீதியாக வசந்த காலம் (Spring Equinox) எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.