வாடகை வாகனங்களை பெற்றுக் கொள்ளும் வெளிநாட்டவருக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை
செல்லுப்படியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் வாகனம் வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களை ஓட்டும் வெளிநாட்டவர்களை கண்டறிவதற்கான விசேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை வழங்குவோருக்கு சட்ட நடவடிக்கை
செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கு கார்,முச்சக்கர வண்டி அல்லது மோட்டார் சைக்கிள் போன்றவற்றை வாடகை, குத்தகை அல்லது வேறு எந்த முறையிலும் வழங்குவது குற்றமாகும்.
அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால், அந்த வாகனத்தை வழங்கிய வர்த்தகர் அல்லது வாகன உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கைக்கு சுற்றுலா செய்யும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் பல சந்தர்ப்பங்களில் நாட்டுக்குள் பயணம் செய்ய வாடகை வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி ஓட்டிய வாகனங்கள் பல்வேறு விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
இவ்வாறான விபத்துக்களில் 2025ஆம் ஆண்டில் 5 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அந்த வாகனங்களை ஓட்டிய வெளிநாட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும், அதே ஆண்டில் 7 கடுமையான சாலை விபத்துகள், 78 சிறிய விபத்துகள் மற்றும் 6 சொத்து சேத விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.