கனடாவின் முன்னாள் விமானப் பணியாளரின் மோசமான செயல்
கனடாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் விமானப் பணியாளர், வணிக விமான விமானியாகவும் தற்போது பணியில் உள்ள விமானப் பணியாளராகவும் நடித்து, அமெரிக்க விமான நிறுவனங்களில் இருந்து நூற்றுக்கணக்கான இலவச விமானப் பயணங்களை பெற்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டொராண்டோவைச் சேர்ந்த டாலஸ் போகோர்னிக் என்பவர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஹவாயில் உள்ள நீதிமன்றத்தில் மின்னணு மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பனாமாவில் கைது செய்யப்பட்ட அவர், நாடு கடத்தப்பட்ட பின்னர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி, குற்றச்சாட்டுகளை மறுத்தார். நீதிமன்ற ஆவணங்களின்படி, போகோர்னிக் 2017 முதல் 2019 வரை டொராண்டோவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு விமான நிறுவனத்தில் விமானப் பணியாளராக பணியாற்றியுள்ளார்.
அந்தப் பணியை விட்டு விலகிய பின்னர், அதே நிறுவனத்தின் போலி ஊழியர் அடையாள அட்டையை பயன்படுத்தி, மேலும் மூன்று விமான நிறுவனங்களில் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு டிக்கெட்டுகளை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போகோர்னிக் சில சமயங்களில், ஓய்விலுள்ள விமானிகள் மட்டும் அமர அனுமதிக்கப்படும் விமானத்தின் காக்பிட்டில் உள்ள “ஜம்ப் சீட்” இருக்கையை கோரியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும், அவர் உண்மையில் காக்பிட்டில் பயணம் செய்தாரா என்பது தெளிவாக இல்லை. இது குறித்து அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகமும் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.