பல பில்லியன் டொலர் நிதி ஊழல் ; மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டுக் காவலுக்கு மாற்றம்!
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பல பில்லியன் டொலர் நிதி ஊழல் தொடர்பான வழக்கில் தண்டனை பெற்று நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறையில் இருக்கும் தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக்காவலில் கழிக்க மன்னர் தலைமையிலான மன்னிப்புக் குழு வெள்ளிக்கிழமை (18) அன்று ஒப்புதல் அளித்துள்ளது” என்று பிரதமரின் சட்டத்துறை தெரிவித்துள்ளது.

73 வயதான நஜிப்
ஆட்சியில் இருந்தபோது அவர் இணை-நிறுவனர் ஆன '1மலேசியா டெவலப்மென்ட் பெர்காட்' என்ற அரசு முதலீட்டு நிதியத்திலிருந்து, பல பில்லியன் டொலர்கள் கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 73 வயதான நஜிப், 2009 முதல் 2018 வரை பிரதமராகப் பதவியில் இருந்தார்.
இந்த வீட்டுக்காவலானது 2028 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்று அந்தத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதற்கான அனைத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் மலேசிய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.