ஆங்கிலக் கால்வாயில் நால்வர் உயிரிழப்பு; பிரித்தானியாவில் இளைஞர் கைது!
ஆங்கிலக் கால்வாயைக் (English Channel) கடந்து பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்றபோது, படகு விபத்துக்குள்ளாகி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய சூடான் நாட்டுப் பிரஜை ஒருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸின் கலே (Calais) பகுதிக்கு அருகிலுள்ள செயின்ட் எட்டியென் ஓ மாண்ட் (Saint-Étienne-au-Mont) கடற்பரப்பில், கடந்த வியாழக்கிழமை சிறிய படகு ஒன்றின் மூலம் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிற்குப் புறப்பட முயன்றனர்.

இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழப்பு
இதன்போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என நான்கு பேர் உயிரிழந்தனர். எனினும் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
சம்பவத்தில் உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகக் கூறி, 27 வயதுடைய சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை பிரித்தானிய தேசிய குற்றவியல் முகவர் அமைப்பு (NCA) கைது செய்துள்ளது.
கென்ட் (Kent) பகுதியில் உள்ள மேன்ஸ்டன் அகதிகள் முகாமில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தற்போது தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விபத்தின் போது 38 பேர் பிரான்ஸ் கடற்கரைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
எனினும், ஏனைய 74 பேர் ஆபத்தான பயணத்தைத் தொடர்ந்து பிரித்தானியக் கடற்கரையை வந்தடைந்துள்ளனர். அதேவேளை இந்த ஆண்டு ஆங்கிலக் கால்வாய் ஊடாகப் பயணிக்க முயன்றவர்களில் இதுவரை 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஏப்ரல் 8 வரை மொத்தம் 5,062 பேர் படகுகள் மூலம் பிரித்தானியாவிற்கு வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது கடந்த 2025 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் குறைவானது என கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த குடியேற்றத்துறை அமைச்சர் மைக் டாப், ஆட்கடத்தல் கும்பல்களின் நடவடிக்கைகளை முறியடிக்கப் புதிய எல்லைப் பாதுகாப்புச் சட்டத்தின் (Border Security Act) கீழ் அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சம்பவம் குறித்து பிரான்ஸ் மற்றும் பிரித்தானியப் பொலிஸார் இணைந்து இந்த விபத்து மற்றும் ஆட்கடத்தல் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.