உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் மீது தாக்குதல்: 4 இந்தியர்கள் பலி;
உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், மற்றொரு இந்தியர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
கினியா-பிசாவு (Guinea-Bissau) நாட்டின் கொடியுடன் பயணித்த ‘கோல்டன் லியோ’) எனும் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இக்கப்பலில் இந்தியா மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று இக்கப்பல் மீது ரஷ்யா 3 க்ரூஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கடற்படை தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வணிகக் கப்பல்களை இலக்கு வைப்பதும், அப்பாவி சிவில் பணியாளர்களின் உயிர ஆபத்தில் தள்ளுவதும், கடல்சார் கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தைத் தடுப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது என இந்தியா தெரிவித்துள்ளது.
இத்தகைய தாக்குதல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.