அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
அமெரிக்காவின் மிசிசிப்பி (Mississippi) மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் நால்வரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச் சூடு லீலாண்ட் (Leland) நகரின் முக்கிய வீதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
இது மாநில தலைநகரான ஜாக்சனில் (Jackson) இருந்து சுமார் 190 கிலோமீட்டர் வடகிழக்கில் அமைந்த சிறிய நகரமாகும்.
காயமடைந்தவர்களில் நால்வர் விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக லீலாண்ட் நகர மேயர் ஜான் லீ (John Lee) தெரிவித்துள்ளார்.
இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனினும், பொலிஸார் சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த நாள், லீலாண்ட் நகரில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் ஹோம் கமிங் (Homecoming) எனப்படும் ஆண்டுதோறும் நடைபெறும் விழா காரணமாக மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
இந்த விழாவில் பழைய மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது வழக்கமாகும்.