பிரேசிலில் விமான விபத்தில் நால்வர் உயிரிழப்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நேற்று (08) இடம்பெற்ற விமான விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று கொலம்பிய சுற்றுலாப் பயணிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட திஜூகா தேசியப் பூங்காவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் விமானியும் மூன்று பெண்களும் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
செங்குத்தான மற்றும் எளிதில் சென்றடைய முடியாத மலைப்பகுதியில் விமானத்தின் எரிந்த பாகங்கள் சிதறிக் கிடக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த மூன்று கொலம்பிய பெண்களும், 15ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ரியோ டி ஜெனிரோவுக்கு வந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டுத் தூதரக அதிகாரி டயானா பேஸ் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததால், அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும், பிரேசிலிய அதிகாரிகளுக்கு கொலம்பிய தூதரகம் உதவி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.