ரஷ்யா வானில் தென்பட்ட நான்கு நிலவுகள்; ஆச்சர்யத்தில் மக்கள்!
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போல தோன்றிய காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த அபூர்வ காட்சிகளை பொதுமக்கள் போட்டோ மற்றும் வீடியோக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வேகமாக பரவி பெரும் கவனம் பெற்றன.

20,000 அடி உயரத்திற்கு மேல் காணப்படும் பனிக்கட்டிகள்
இந்த நிகழ்வு எவ்வாறு உருவாகிறது என்றால், வானில் மிக உயரத்தில் உருவாகும் சிரஸ் (Cirrus) மேகங்களில் இருக்கும் சிறிய பனிக்கட்டிகள் முக்கிய காரணம். பொதுவாக 20,000 அடி உயரத்திற்கு மேல் காணப்படும் இந்த பனிக்கட்டிகள் அறுகோண (hexagonal) வடிவத்தில் இருக்கும்.
நிலவொளி இந்த பனிக்கட்டிகள் வழியாகச் செல்லும்போது, ஒளி விலகல் (refraction) மற்றும் பிரதிபலிப்பு (reflection) ஏற்படுகிறது. அதன் விளைவாக, நிலவின் இருபுறங்களிலும் அல்லது சுற்றிலும் கூடுதல் ஒளிக் கறைகள் தோன்றி, பல நிலவுகள் இருப்பது போல தோன்றுகிறது.
இது விண்வெளி சம்பவமல்ல; முழுக்க முழுக்க பூமியின் வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் (optical) விளைவு தான். இதுபோன்ற காட்சிகள் குளிரான பகுதிகளில், குறிப்பாக பனிமூட்டம் அதிகமாக இருக்கும் நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.
அதனால், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் காணப்பட்ட “4 நிலவுகள்” என்பது உண்மையான நிலவுகள் அல்ல; இயற்கையின் ஒளி மாயாஜாலம் தான் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.