பிரான்ஸில் தீவிரம் காட்டும் கொரோனா பரவல்: சடுதியாக அதிகரிக்கும் பாதிப்பு
உலகை உலுக்கி வருகிற ஓமிக்ரோன் வைரஸ், தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் திகதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஓமிக்ரோன் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 4 ஆயிரத்து 611 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதனையடுத்து பிரான்ஸில் 90 இலட்சத்து 88 ஆயிரத்து 371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 22 ஆயிரத்து 546 பேர் மரணமடைந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 11 இலட்சத்து 71 ஆயிரத்து 23 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 455 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் 42,085 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 77 இலட்சத்து 94 ஆயிரத்து 802 பேர் குணமடைந்துள்ளனர்.