15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்க தயாராகிறது பிரான்ஸ்
15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் பாராளுமன்றம் இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்யும் முதல் நாடாக பிரான்ஸ் மாறும்.

பாராளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்கள் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டமூலத்தின் இறுதி வடிவத்திற்கு ஒருமனதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இறுதி வாக்கெடுப்புக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி, 2026 செப்டம்பர் 1 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் டிக்டொக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப் செட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதிய கணக்குகளைத் தொடங்க முடியாது.
மேலும், 2027 ஜனவரி முதல், ஏற்கனவே 15 வயதிற்குட்பட்டோரால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக ஊடகக் கணக்குகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதேவேளை, புதிய கல்வியாண்டு தொடங்கும் செப்டம்பர் மாதம் முதல், பிரான்ஸின் உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது
இருப்பினும், விக்கிப்பீடியா, கல்வி இணையத்தளங்கள் மற்றும் திறந்த மூல மென்பொருள் தளங்கள் இந்தத் தடையிலிருந்து விலக்கு பெறும்.