சிட்னியில் திடீரென ரத்தான பல விமானங்கள்; தவித்த பயணிகள்!
அவுஸ்திரேலியாவின் பரபரப்பான சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறையினால் இன்று (11) வெள்ளிக்கிழமை காலை பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பெருமளவிலான விமானங்கள் தாமதமடைந்ததாக அந்நாட்டு வான்வழிப் போக்குவரத்து முகாமைத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திடீரென ஏற்பட்ட பணியாளர்கள் தட்டுப்பாட்டினால் வான்வழிப் போக்குவரத்து பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வான்வழிப் போக்குவரத்து முகாமைத்துவ நிர்வாகம் 'ஏர்சர்வீசஸ் அவுஸ்திரேலியா' அவசரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளது.

ஆதன் காரணமாக வருகை தரவிருந்த சுமார் 14 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பல விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் புறப்பட முடியாமல் தாமதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஏர்சர்வீசஸ் அவுஸ்திரேலியா' பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி பீட்டர் கரன் கூறுகையில் , சிட்னி விமான நிலையத்திற்கு 41 கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்படும் நிலையில், 08 பேர் நீண்டகால விடுப்பில் உள்ளதால், திடீரென ஏற்பட்ட ஒருவரின் விடுப்புக்கூட பெரும் இடையூறை ஏற்படுத்தியது.
காலை 8:15 மணியளவில் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு, பிற்பகலில் விமானங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பின.
கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் சிட்னி விமான நிலையத்தில் சுமார் 06 முறை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் ஆபத்தான நிலைகள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டாளர்களின் பணிச்சுமை மற்றும் சோர்வினால் இந்தச் சம்பவங்கள் நடந்ததா என்பது குறித்து அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிகப்படுகின்றது.