ஜி7 நாடுகளின் முயற்சிக்கு மத்தியிலும் அதிகரிக்கும் எரிபொருள் விலை!
ஜி7 நாடுகள் தங்களின் அவசரகால கையிருப்பில் இருந்து கோடிக்கணக்கான பேரல் கச்சா எண்ணெயை வெளியிட ஒப்புக்கொண்ட போதிலும், வரும் வாரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயரக்கூடும் என்று எரிபொருள் சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வழக்கமாக ஆண்டின் இந்த காலத்தில் பெட்ரோலுக்கான தேவை குறைவதாலும், குளிர்காலத்திற்கான எரிபொருள் மாற்றத்தாலும் கோடைகாலத்தை விட விலை குறையும்.
ஆனால், இந்த முறை அவ்வாறு குறைய வாய்ப்பில்லை என்று 'கனடியன்ஸ் ஃபார் அஃபோர்டபிள் எனர்ஜி' அமைப்பின் தலைவர் டான் மெக்டீக் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 12-ஆம் திகதி வரவிருக்கும் 'தேங்க்ஸ்கிவிங்' பண்டிகைக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 சென்ட் வரை உயரக்கூடும் என்றும், அக்டோபர் மூன்றாவது வாரத்திற்குள் மேலும் 10 முதல் 15 சென்ட் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் டான் மெக்டீக் கணித்துள்ளார்.
உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவுவதே இந்தத் தொடர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியின் பதற்றங்கள் மற்றும் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரினால் உலகளவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அடங்கிய ஜி7 நாடுகள், தங்களது அவசரகால கையிருப்பில் இருந்து 10 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் பொருட்களை சந்தையில் வெளியிட ஒப்புக்கொண்டுள்ளன.
எனினும், ஜி7 நாடுகளின் இந்த நடவடிக்கை தற்காலிகமான நிவாரணத்தை மட்டுமே தரும் என டான் மெக்டீக் சுட்டிக்காட்டியுள்ளார்.
"அமெரிக்கா உட்பட ஜி7 நாடுகள் அனைத்தும் சேர்த்து ஒரு நாளைக்கு சுமார் 3.2 கோடி (32 மில்லியன்) பேரல் எண்ணெயைப் பயன்படுத்துகின்றன.
எனவே, சந்தைக்கு வரும் 10 கோடி பேரல் என்பது வெறும் 3 நாட்களுக்கான நுகர்வுக்கு மட்டுமே சமம். இது நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வாகாது" என்று கூறியுள்ள அவர், டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் விரைவில் மீண்டும் ஏறுமுகத்தை சந்திக்கும் எனக் கூறியுள்ளார்.