விவாகரத்தான மனைவியிடம் இருந்து மகள்களை மீட்க பெண்ணாக மாறிய தந்தை; ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்!
தென் அமரிக்க நாடான ஈக்வடார் நாட்டில் ஒரு தம்பதி விவாகரத்து கோரும் போது, அவர்களுடைய பெண் குழந்தைகள் தாயிடமே வளர வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
இந்நிலையில் மகள்களை சட்டப்படி தன் வசம் அழைத்துச் செல்வதற்காக, ஈக்வடாரில் தந்தை ஒருவர் தன் பாலினத்தையே மாற்றிக் கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பாசக்கார தந்தையின் பெயர் ரெனே சாலினாஸ் ராமோஸ். 47வயதாகும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ராமோஸும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அந்நாட்டு சட்டப்படி பெண் குழந்தைகள் தாயிடம் தான் இருக்க வேண்டும் என்பதால், இரண்டு மகள்களும் தாயாரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர். ஆனால், தன் மனைவியும், அவரது குடும்பத்தாரும் தனது மகள்களைக் கொடுமைப்படுத்துவதாக கேள்விப் பட்டுள்ளார் ராமோஸ்.
அதோடு, கடந்த ஐந்து மாதங்களாக மகள்களைப் பார்க்க முடியாமலும் தடுக்கப்பட்டுள்ளார்.
எனவே, தனது மகள்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்துவிட அவர் விரும்பி சட்டப்படி அதற்கு முயற்சித்த போது, அவர் தந்தை என்பதால், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமாக தீர்வு
ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு வித்தியாசமாக தீர்வு காண முடிவு செய்தார் ராமோஸ். அதனைத் தொடர்ந்து மகள்களுக்காக தன் பாலினத்தை அவர் மாற்றிக் கொண்டார். அதுமட்டுமல்லாது பெண்ணாக மாறிய ராமோஸ், தனது அடையாள அட்டையிலும் தனது பாலினத்தை பெமினினோ (FEMENINO) என மாற்றிக் கொண்டார்.
இப்போது தானும் ஒரு பெண் தான், எனவே தன் குழந்தைகளுக்கு தன்னால் நல்ல ஒரு அம்மாவாக இருக்க முடியும்' எனக் கூறி, மனைவியிடம் இருந்து மகள்களை மீட்டுத்தரக் கோரி நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார் அந்த அதிசய தந்தை .
தான் பெண்ணாக மாறியதற்கான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார். பெற்ற மகள்களுக்காக தந்தை பெண்ணாக மாறிய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரான்ஸ் ஆர்வலர்கள் கருத்து
ஆனால், இந்த விவகாரத்தால் சட்டசபையில் எங்களுக்கு எதிராக சட்டம் இயற்றத் தொடங்கி விடுவார்களோ என்று நாங்கள் பயப்படுகிறோம்," என டிரான்ஸ் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
மேலும், "பாலினம் மற்றும் பாலினத்தை அங்கீகரிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக நாங்கள் கண்டனம் செய்து வரும் வேளையில், ஒருவர் தனது ஐடியில் விருப்பமான பாலின மாற்றத்தை வெளிப்படையாக எளிதாகக் கடந்து சென்றது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டிரான்ஸ் ஆர்வலர்களின் இந்தக் கருத்தால், தனது வழக்கு பின்னடைவைச் சந்தித்துள்ளதை அறிந்து கொண்ட ராமோஸ்,
"எனது செயல் ஒரு நபருக்கு எதிரானது அல்ல. அதோடு யாருக்கும் தீங்கு விளைவிப்பதும் அல்ல. மாறாக ஆணாகப் பிறந்த ஒரே காரணத்தால் சில சலுகைகள் மறுக்கப்படுவதற்கு எதிரானப் போராடுவதுதான்" எனவும் விளக்கம் அளித்துள்ளார்.