திடீர் பல்டியடித்த ஜெர்மனி!
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை தற்போதைக்கு நிறுத்த முடியாது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 41-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், உக்ரைன் மீதான போரை கண்டித்து ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளதார தடைகளை விதித்து வருகின்றன.
அதேவேளை, ஐரோப்பாவின் எரிவாயு, கச்சா எண்ணெய் தேவையை ரஷ்யாவே பூர்த்தி செய்து வருகிறது. ஐரோப்பாவின் 40 சதவீத இயற்கை எரிவாயு மற்றும் 25 சதவீத கச்சா எண்ணெய் தேவையை ரஷ்யா பூர்த்தி செய்கிறது.
இதனால், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் ஐரோப்பாவுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடான ஜெர்மெனியின் எரிவாயு, கச்சா எண்ணெய் தேவையை ரஷ்யாவே பூர்த்தி செய்து வருகிறது.
ஜெர்மனியின் 55 சதவீத இயற்கை எரிவாயு தேவை, 34 சதவீத கச்சா எண்ணெய் தேவையை ரஷ்யா பூர்த்தி செய்கிறது.
சமீபத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்ததால் தங்களிடமிருந்து எரிவாயு, கச்சா எண்ணெய் வாங்கும் நட்பு வட்டத்தில் இல்லாத நாடுகள் தங்கள் நாட்டு பணமான ரூபெல்லில் தான் வாங்க வேண்டும் என ரஷ்யா அதிரடியாக அறிவித்தது.
மேலும், ரூபெல்லில் வாங்கவில்லை என்றால் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வரும் கச்சா எண்ணெய், எரிவாயுவை நிறுத்துவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன. மேலும், மாற்று ஏற்பாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்குவதை தற்போதைக்கு நிறுத்த முடியாது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த சில காலம் தேவைப்படுகிறது என்று ஜெர்மனி நிதி மந்திரி தெரிவித்துள்ளார்.