இணையத்தில் பேசப்பட்ட பேய் பொம்மை மாயம் ; ஆய்வாளர் மர்ம மரணம்
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அனபெல் பொம்மை மாயமானதாக பரவிய வதந்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
உலகம் முழுவதும் பரபரப்பாக வரவேற்கப்பட்ட ‘அனபெல்’ திகில் திரைப்படத்தின் பிரதான கருப்பொருளான அதே பெயருடைய அமானுஷ்ய பொம்மை, மீண்டும் ஒரு முறை இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இவையே கலக்கத்தில் இருக்கும்போது, அமானுஷ்ய ஆய்வாளர் டான் ரிவேரா (Dan Rivera), இந்த வதந்திகளை மறுத்து, “பொம்மை பாதுகாப்பாக இருக்கிறது” என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார்.
மேலும், இந்த அனபெல் பொம்மை அறிமுக நிகழ்வுக்காக லூசியானா மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இல்லினாயில் நடைபெறும் நிகழ்வில் திகில் ரசிகர்கள் காணக்கூடும் எனவும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக கடந்த ஜூலை 13ஆம் திகதி, பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பர்க் நகரில் உள்ள ஹோட்டல் அறையில் டான் ரிவேரா மரணமடைந்த நிலையில் காணப்பட்டார்.
விசாரணை அதிகாரிகள் இது குறித்து, “தற்போது மரணத்திற்கு சந்தேகத்திற்குரிய எந்த சான்றுகளும் இல்லை. மரணக்காரணம் பிரேத பரிசோதனையின் பின்னர் மட்டும் உறுதியாகத் தெரிய வரும்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மரணச் செய்தியையடுத்து, இணையவாசிகள் “அனபெல் பொம்மைக்கு இது சம்பந்தமா?” என சந்தேகங்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இது, திரைப்படங்களில் காணப்படும் திகில் கதைகள் வாழ்க்கையிலும் நிகழ்வதா? என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
தற்போது டான் ரிவேராவின் மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், உண்மையான காரணம் சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, அனபெல் பொம்மையை சுற்றிய மர்மம் தொடர்கிறது.