லண்டனில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமான ஜன்னலை உடைத்த ராட்சத ஐஸ் கட்டி!
லண்டனில் இருந்து கோஸ்டா ரிக்காவிற்கு சென்று கொண்டு இருந்த பிரிட்டிஷ் விமானம் ஒன்றின் ஜன்னல் கண்ணாடி நடுவானில் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த விசாரணை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு லண்டனில் இருந்து கோஸ்டா ரிக்காவிற்கு BA2236 என்ற அந்த போயிங் 777 ரக விமானம் இயக்கப்பட்டுள்ளது.
200 பயணிகளுடன் விமானம் 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது திடீரென எங்கிருந்தோ பறந்து வந்த ராட்சச ஐஸ் கட்டி ஒன்று விமானத்தின் ஜன்னல் ஒன்றை உடைத்து நொறுக்கி உள்ளது. பொதுவாக விமான ஜன்னல்களை அவ்வளவு எளிதாக உடைக்க முடியாது. இது துப்பாக்கி குண்டுகள் கூட துளைக்காத அளவிற்கான பாதுகாப்பை கொண்டு இருக்கும்.
அப்படி இருந்தும் ஐஸ் கட்டி ஒன்று அதி வேகத்தில் வந்து மோதியதில் கண்ணாடி நொறுங்கியது. இந்த துளை வழியாக காற்று வேகமாக வந்ததையடுத்து அங்கு இருந்த பொருட்களை வைத்து தற்காலிகமாக துளையை மூடி உள்ளனர்.
அதோடு அந்த வரிசை இருக்கையில் இருந்த பயணிகளுக்கு வேறு இருக்கைகள் கொடுக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு கருதி விமானம் பறக்கும் உயரம் குறைக்கப்பட்டது.
இதையடுத்து உடைந்த ஜன்னலோடு பறந்து கோஸ்டா ரிக்காவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில்தான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வந்தது.
அதாவது அந்த விமானம் பறந்த அதே நேரத்தில் எதிர் திசையில் வேறு ஒரு விமானம் கூடுதலாக 1000 அடி உயரத்தில் பறந்துள்ளது. இந்த விமானத்தில் படிந்து இருந்த ஐஸ் கட்டிகள் பறந்து வந்து கீழே பறந்து கொண்டு இருந்த பிரிட்டிஷ் விமானத்தின் ஜன்னலில் மோதி உள்ளமை கண்டுபிடிப்பட்டது.
கோடியில் ஒருமுறை மட்டுமே இப்படி நடக்கும் என சொல்லப்படுகின்றது. அதேவேளை இந்த விபத்தால் எந்த விதமான உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.