உலகின் குள்ள ஒட்டகச்சிவிங்கி கண்டுபிடிப்பு
உயரமாக இருப்பதே ஒட்டகச்சிவிங்கியின் தனிச் சிறப்பு என கூறப்படுகின்ற நிலையில் உகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒட்டகச்சிவிங்கிகள் தன் உயரத்தைக் கொண்டு உயரமான மரங்களிலுள்ள இலைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடும். 2018ஆம் ஆண்டில் ஒட்டகச்சிவிங்கிப் பாதுகாப்பு அமைப்புடன் செயல்படும் ஆய்வாளர்கள் நமீபியாவில் 2.6 மீற்றர் உயரம் கொண்ட ஒட்டகச்சிவிங்கியைக் கண்டனர்.
சாதாரண ஒட்டகச்சிவிங்கிகள் 4.5 மீற்றரிலிருந்து 5 மீற்றர் வரையில் வளரக்கூடியவை. கடந்த ஆண்டு உகாண்டாவிலுள்ள முர்சிசோன் கோஸ் வனவிலங்குப் பூங்காவில் அவர்கள் இன்னொரு குட்டையான ஒட்டகச்சிவிங்கியைக் கண்டுபிடித்தனர்.
அதன் உயரம் 2.8 மீற்றர் மட்டுமே உள்ளதாம். அது தொடர்பிலான அவர்களின் ஆய்வு பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.
இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளின் கழுத்து நீளமாக இருந்தது.
ஆனால் அவற்றின் கால்கள் குட்டையாகவும் தசைப்பிடிப்பாகவும் இருந்தன.
மேலும் குள்ள ஒட்டகச்சிவிங்கிகளால் மற்ற சாதாரண ஒட்டகச்சிவிங்கிகளுடன் சேர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட முடியாது என்றும் கருதப்படுகிறது.