கனடாவில் 17 வயது சிறுமியை தாக்கிய 15 வயது சிறுமி கைது
கனடாவின் செயின்ட் கேத்தரினஸ் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில், 17 வயது சிறுமி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் லேக்சைட் பூங்காவில் பெரும் கலவரம் வெடித்துள்ளதாக நயாகரா பிராந்திய பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
பூங்காவில் உள்ள சிற்றுண்டிச்சாலை அருகே பல பதின்ம வயது சிறுமிகள் இணைந்து மற்றொரு சிறுமியைத் தாக்குவதாக நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தபோது, தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் இருந்த 17 வயது சிறுமியை மீட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவரான செயின்ட் கேத்தரினஸ் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அடையாளம் காணப்பட்டு, பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, இந்த ஆண்டில் லேக்சைட் பூங்கா கடற்கரைப் பகுதியில் இதுபோன்ற பல கலவரங்கள் பதிவாகியுள்ளதால், அங்கு சீருடை அணிந்த பொலிஸாரின் பாதுகாப்புப் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.