பாடசாலைக்கு வெளியே கனேடிய சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்: முதல் புகைப்படம் வெளியானது
ஒன்ராறியோ பர்லிங்டனில் பாடசாலைக்கு வெளியே சிறுமி ஒருவர் வாகனம் மோதி பலியான நிலையில், குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மதியத்திற்கு மேல், சுமார் 5.30 மணியளவில் 8 வயதான Jayne Hounslow என்ற மாணவி வாகனம் மோதி குற்றுயிராக மீட்கப்பட்டார்.
பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெற்றோரின் காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த போது, அவர் மீது வாகனம் மோதியுள்ளது.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தாலும், உயிரை காப்பாற்ற முடியாமல் போனது. இதனிடையே வாகனத்தால் மோதிய 21 வயது சாரதி சம்பவயிடத்தில் இருந்து அப்போது தப்பியிருந்தாலும், பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
சிறுமி Jayne Hounslow மரணம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது. அவர் சார்ந்த சமூகத்தையும் இந்த மரணம் பாதித்துள்ளதாகவே கூறுகின்றனர்.
இதனிடையே, சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறும் பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.