உலகளவில் பரபரப்பு ; ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு மீண்டும் மறுப்பு
வெனிசுவேலாவில் இடம்பெற்ற அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்க மச்சாடோ முன்வந்த போதும் நோபல் குழு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ, 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை வென்றார்.
வெனிசுவேலாவின் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் மச்சாடோ இன்று வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப்பைச் சந்திக்கவுள்ளார்.

தனது நோபல் பரிசை டிரம்ப்புக்கு வழங்க மச்சாடோ முன்வந்த போதிலும், நோபல் பரிசை மற்றொருவருக்கு மாற்ற முடியாது என நோபல் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதேவேளை வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தொலைபேசி உரையாடலை நடத்தியுள்ளார்.
இந்த உரையாடலை "நீண்ட மற்றும் பயனுள்ள ஒன்று" என டெல்சி ரோட்ரிக்ஸ் வர்ணித்துள்ளார்.
இதில் வெனிசுவேலாவின் அபரிமிதமான எண்ணெய் வளத்தைப் பயன்படுத்துவதில் அமெரிக்க நிறுவனங்களின் பங்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத் தடைகளை நீக்கி வர்த்தகத்தை மேம்படுத்துதல், மதுரோவின் ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்ட கைதிகளை விடுவிப்பதன் மூலம் அமைதியை நிலைநாட்டுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்கும் பணியைத் தற்காலிக அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 400 க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்சி ரோட்ரிக்ஸின் "வெனிசுலா ஒரு புதிய அரசியல் தருணத்திற்குள் நுழைகிறது. கைதிகள் விடுவிப்பு இன்னும் நிறைவடையவில்லை, அது தொடரும்" என தெரிவித்துள்ளார்.