தென் ஆபிரிக்காவில் ஆரம்பமான திடீர் தங்க வேட்டை ; சமூக ஊடகங்கத்தால் குவியும் மக்கள்
தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள ஸ்பிரிங்ஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு சிறிய கால்நடைப் பண்ணையில் தங்கம் கண்டறியப்பட்டதாகப் பரவிய செய்தியைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு, குகுலேத்து குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது, மண்ணில் தங்கத் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

சமூக ஊடகங்கள்
இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியதால், அக்கம்பக்கத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் மண்வெட்டி மற்றும் கடப்பாரைகளுடன் அந்தப் பண்ணையில் குவியத் தொடங்கினர்.
இந்தத் தங்க வேட்டை சட்டவிரோதமானது என்று தென் ஆபிரிக்காவின் கனிம வளத் துறை எச்சரித்துள்ளது. முறையான அனுமதி இன்றிச் செய்யப்படும் இந்த அகழ்வு சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசு கூறியுள்ளது.
நிலப்பகுதி உறுதியற்றதாக இருப்பதால், எந்த நேரத்திலும் மண் சரிவு ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மண்ணில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கப் பாதரசம் மற்றும் சோடியம் சயனைடு போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவது அப்பகுதி மக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.