ஜிமெயில் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: கூகுள் அதிரடி அறிவிப்பு
கூகுள் நிறுவனம் பயனர்கள் முதன்மை மின்னஞ்சல் முகவரியை மாற்ற அனுமதிகும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, ஜிமெயில் பயனர்கள் தங்களின் பழைய மின்னஞ்சல் முகவரிகளுடனேயே முடங்கிக் கிடக்கும் நிலை காணப்பட்டது.
இளமைக்கால ஆர்வத்தில் வைக்கப்பட்ட பெயர்கள் அல்லது தொழில்முறைக்கு ஒவ்வாத விசித்திரமான பெயர்களை மாற்ற முடியாமல் பலர் தவித்து வந்தனர்.
இதற்கு முன்பு மின்னஞ்சல் முகவரியை மாற்ற வேண்டுமானால், பழைய கணக்கை விட்டுவிட்டு புதிய கணக்கைத் தொடங்கி அனைத்துத் தரவுகளையும் மீண்டும் உருவாக்க வேண்டியிருந்தது.

ஆனால், பயனர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, முதன்மை மின்னஞ்சல் முகவரியை மாற்ற அனுமதிக்கும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் தற்போது படிப்படியாக அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த புதிய அப்டேட் மூலம், பயனர்கள் தங்களின் பழைய கணக்கை அப்படியே வைத்துக்கொண்டு புதிய மின்னஞ்சல் முகவரியைத் தேர்வு செய்யலாம். நீங்கள் புதிய முகவரிக்கு மாறினாலும், பழைய மின்னஞ்சல் முகவரி மறையாமல் 'மாற்று மின்னஞ்சலாக' உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம், பழைய முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களும் உங்கள் இன்பாக்ஸிற்கே வந்து சேரும், மேலும் பழைய அல்லது புதிய ஆகிய இரண்டு முகவரிகளில் எதைப் பயன்படுத்தியும் உங்கள் கணக்கிற்குள் நுழைய முடியும். முக்கியமாக, இந்த மாற்றத்தால் உங்கள் கணக்கில் உள்ள எந்தத் தரவுகளும் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த வசதியில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. ஒருமுறை மின்னஞ்சல் முகவரியை மாற்றினால், அடுத்த 12 மாதங்களுக்கு மீண்டும் புதிய மாற்றங்களைச் செய்ய முடியாது.
மேலும், ஒருமுறை புதிய முகவரியை அமைத்துவிட்டால் அதனை நீக்க முடியாது, ஆனால் தேவைப்பட்டால் பழைய முகவரிக்கே மீண்டும் மாறிக் கொள்ளும் வசதி உண்டு. தங்களின் பழைய அல்லது சங்கடமான மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து விடுபட்டு, டிஜிட்டல் அடையாளத்தை மேம்படுத்த விரும்பும் லட்சக்கணக்கான பயனர்களுக்கு இந்த அப்டேட் ஒரு சிறந்த தீர்வாகவும், ஒரு புதிய தொடக்கமாகவும் அமைந்துள்ளது.