பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சையின் உரையை நிராகரித்த மாணவர்கள் ; பிரபல பல்கலையில் சம்பவம்
பாதுகாப்பு தொடர்புடைய நிறுவனங்களுடன் கூகுள் செய்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டான்போர்ட் பல்கலை பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை நிகழ்த்திய உரையை, மாணவர்களில் ஒரு பகுதியினர் புறக்கணித்தனர்.
அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (14) நடைபெற்றது.

போராட்டம்
இதில் கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில், அரங்கில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென எழுந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் குடியேற்ற அமலாக்கப் பிரிவு ஆகியவற்றுடன் கூகுள் நிறுவனம் வைத்துள்ள தொழில்நுட்ப ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
குறிப்பாக, இஸ்ரேல் அரசுக்கு கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் கிளவுட் தொழில்நுட்பம், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
‘பாலஸ்தீன நீதிக்கான மாணவர்கள்’ உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த வெளிநடப்பை ஒருங்கிணைத்தன.