கனடாவில் நேர்ந்த கொடூர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பரிதாப பலி!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கிரேட்டர் சட்பரி பகுதியில் நிகழ்ந்த கொடூர வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 5 அன்று காலை 9:55 மணியளவில், வேலி ஈஸ்ட் பகுதியில் உள்ள 'ஹேன்மர் வேலி ஷாப்பிங் சென்டர்' அருகே 'முனிசிபல் ரோடு 80' பாதையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கிழக்கே பயணித்த நீல நிற கார், ஷாப்பிங் சென்டர் பார்க்கிங்கில் இருந்து இடதுபுறம் திரும்பி மேற்கே செல்ல முயன்ற கருப்பு நிற எஸ்யுவி வாகனத்துடன் பலமாக மோதியது.

நீல நிற காரை ஓட்டிவந்த 21 வயது இளைஞர் ஆர்டின் யார்க் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் பயணித்த அவரது சகோதரரான 20 வயது இளைஞர் ட்ரேக் யார்க் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எஸ்யுவி வாகனத்தை ஓட்டிவந்த 43 வயது பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துக்கான காரணம் குறித்து சட்பரி பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது ‘டாஷ்கேம்’ காட்சிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக சட்பரி பொலிஸாரைத் (705-675-9171) தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.