டொரோண்டோ பகுதியில் வீட்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
டொரோண்டோ பெரும்பாக பகுதியில் கடந்த ஆண்டு வீட்டு விற்பனை, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.2 சதவீதம் குறைந்துள்ளது என அண்மையில் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
டொரோண்டோ பிராந்திய ரியல் எஸ்டேட் வாரியம் (TRREB) வெளியிட்ட அறிக்கையின் படி, “2025 ஆம் ஆண்டில் நிலவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, நுகர்வோர் நம்பிக்கையை பாதித்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சந்தையில் வீட்டு பட்டியல்கள் (listings) அதிக அளவில் இருந்ததால், விற்பனை விலைகள் குறைந்து பேசித் தீர்மானிக்கக் கூடிய சூழல் உருவானதாகவும், இது வீடு கொள்வனவு செலவை ஓரளவு குறைத்ததாகவும் அறிக்கை கூறுகிறது. 2025 ஆம் ஆண்டில் 62,433 வீடுகள் விற்பனையாகியுள்ளன.

புதிய வீட்டு பட்டியல்கள் 1,86,753 ஆக பதிவாகி, இது கடந்த ஆண்டைவிட 10.1 சதவீதம் அதிகரிப்பு ஆகும். கடந்த ஆண்டு வீடுகளின் சராசரி விற்பனை விலை 1,067,968 டாலராக இருந்தது.
இது 2024 ஆம் ஆண்டின் 1,120,241 டாலருடன் ஒப்பிடுகையில் 4.7 சதவீதம் குறைவு ஆகும்.
விற்பனை விலைகளும், கடன் வட்டி விகிதங்களும் குறைந்ததால், கடந்த ஆண்டு டொராண்டோ பெரும்பாக பகுதி வீட்டு சந்தை அதிக அளவில் மலிவானதாக மாறியது,” என தெரிவிக்கப்படுகின்றது.