நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 கிராம மக்கள் பலி
நைஜீரியாவின் வடக்கு நைஜர் மாநிலத்தில், ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 கிராம மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் கடத்தப்பட்டுள்ளனர்.
கலவரம் நீடிக்கும் இந்தப் பகுதியில் ஏற்பட்ட அண்மைய கொடூர தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் மேலும் சிலர் கடத்தப்பட்டுள்ளனர் எனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டெமோ கிராமத்தில் உள்ள காசுவான் டாஜி சந்தை மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலின் போது, சந்தை கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், உணவுப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நைஜீரியாவில், குறிப்பாக தொலைதூர கிராமங்களில், பாதுகாப்பு மற்றும் அரசின் கண்காணிப்பு குறைவாக உள்ள பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் “பாண்டிட்கள்” என அழைக்கப்படும் ஆயுதக் குழுக்கள் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய தாக்குதல்கள் நாட்டில் தற்போது சாதாரண நிகழ்வாக மாறியுள்ளது. தாக்குதலாளர்கள் கேபே மாவட்டத்தை ஒட்டிய தேசிய வனப் பகுதியிலிருந்து வந்துள்ளனர்.
பெரிய வனக் காப்பகங்கள், ஆயுதக் குழுக்களின் மறைவிடங்களாக செயல்படுவது வழக்கமான போக்காக உள்ளது என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தாக்குதலாளர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்ததாகவும், கிராமத்துக்குள் நுழைந்தவுடன் யாரையும் குறிவைக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.