அமெரிக்க பணயக் கைதியை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்

Sahana
Report this article
அமெரிக்க பணயக் கைதியை விடுவிக்கவும் இஸ்ரேலிய பணயக் கைதிகளில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை ஒப்படைக்கவும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பெப்ரவரி மாதம் வரை ஏழு வாரங்கள் இஸ்ரேல்-காஸா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், தற்போது அடுத்த கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கட்டாரில் நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் ஏழு வாரங்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
அப்போது 25 உயிரோடுள்ள பணயக் கைதிகளையும், 8 உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கவும், இதற்கு இணையாக சுமார் 2 ஆயிரம் பலஸ்தீனர்களை இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம்செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கடைசி வாரம் வரை இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றது. ஏழு வார ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் இஸ்ரேல் காஸாவிற்குச் செல்லும் எல்லையை மூடியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தியுள்ளது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை குறித்து உறுதியற்ற நிலையில் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் தற்போது ஒரு பணயக்கைதி மற்றும் உயிரிழந்த 4 பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கச் சம்மதம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஏடன் அலெக்சாண்டரை விடுவிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் ஹமாஸ் வெளியிடவில்லை.