காசா ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கும் ஹமாஸ் அமைப்பு
அமெரிக்காவின் அமைதித் திட்டத்தில் உள்ள சில முக்கிய நிபந்தனைகளை ஏற்க மறுத்துள்ள ஹமாஸ் அமைப்பு, எகிப்தில் இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வ கையெழுத்து நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 10ஆம் திகதியன்று அமுலுக்கு வந்தது.
இதன் ஒரு பகுதியாக, காஸாவின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறியதையடுத்து, இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, நாளை (13) நண்பகலுக்குள் ஹமாஸ் அமைப்பு, தன்னிடம் மீதமுள்ள 47 இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.
அதற்கு பதிலாக, இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள 250 பலஸ்தீனிய கைதிகளையும், போரின்போது கைது செய்யப்பட்ட 1,700 காஸா கைதிகளையும் விடுவிக்கும்.
இந்த சூழலில், அமைதி ஒப்பந்தத்தின் அடுத்தகட்டமாக எகிப்தில் நடைபெற உள்ள உத்தியோகபூர்வ கையெழுத்து நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தில், ஹமாஸ் அமைப்பினர் காஸாவை விட்டு வெளியேற வேண்டும் மற்றும் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் போன்ற நிபந்தனைகள் இருப்பதே இதற்குக் காரணம்.
இதுகுறித்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு உறுப்பினர் ஹொசாம் பத்ரான் கூறுகையில், ‘ஹமாஸ் உறுப்பினர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பலஸ்தீனியர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றுவது பற்றிய பேச்சு அபத்தமானது மற்றும் முட்டாள்தனமானது.
மேலும், ஹமாஸ் அமைப்பு காஸாவின் புதிய அரசாங்கத்தில் இருந்து விலகினாலும், ஆயுதங்களைக் கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடத் தவறினால், தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படலாம் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளதால், காஸாஅமைதிப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.