கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து பொதுமக்களுக்குக் எச்சரிக்கை!
கனடாவில் கோடைக் காலம் தொடங்கும் வேளையில், வீட்டுப் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளின் பெயரில் பொதுமக்களிடம் பணத்தைப் பறிக்கும் மோசடிக் கும்பல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக ஹாமில்டன் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடிக்காரர்கள் பொதுவாக உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி, தாங்கள் அந்தப் பகுதியிலேயே வேலை செய்து கொண்டிருப்பதாகக் கூறுவார்கள்.

"இலவசமாக உங்கள் வீட்டை ஆய்வு செய்கிறோம்" என்று கூறி, தேவையில்லாத பயத்தை உருவாக்கி, அவசர அவசரமாகப் பல்லாயிரக்கணக்கான டாலர்களைப் பறிக்கும் மோசடிகளில் ஈடுபடுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூரையை ஆய்வு செய்யச் செல்பவர்கள், நல்ல நிலையில் இருக்கும் கூரையைத் தாங்களே சேதப்படுத்திவிட்டு, அதைப் புகைப்படம் எடுத்து உங்களிடம் காட்டி ஏமாற்றுவார்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசர கதியில் செய்யப்படும் இந்த வேலைகள் மிகவும் தரம் குறைந்தவையாக இருக்கும். பல நேரங்களில் வேலையை முடிக்காமலேயே பணத்துடன் தலைமறைவாகி விடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சிறந்த ஒப்பந்ததாரர் (Contractor) இந்தச் சமயத்தில் மிகவும் வேலைப்பளுவுடன் இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தானாகவே உங்கள் தேடி வந்து உதவி செய்கிறேன் என்று கூறுபவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் என கான்ஸ்டபிள் டிரெவர் மெக்கென்னா தெரிவித்துள்ளார்.
நீங்களாக அழைக்காமல் கதவைத் தட்டி வரும் நபர்கள், நம்ப முடியாத அளவிற்கு மிகக் குறைந்த விலை பேசுவது, உடனே முடிவெடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, நிறுவனத்தின் பெயர் அல்லது லோகோ இல்லாத வாகனங்களில் வருவது போன்ற சந்தர்ப்பங்களில் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.