நிதியை நிறுத்திய டிரம்ப் ; அதிர்ச்சி கொடுத்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தனது நிர்வாக முறையை மாற்ற வேண்டும். இல்லையென்றால், வரி விலக்கு ரத்து செய்யப்படும் என்றும் கூறினார். பல பல்கலைக்கழகங்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அரசின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. சட்டவிரோதமான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று ஹார்வர்ட் குற்றம் சாட்டியது.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அரசு விதித்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட மறுத்ததால், டிரம்ப் நிர்வாகம் உடனடியாகப் பதிலடி கொடுத்தது. சிவில் உரிமைகள் சட்டங்களை நிலைநிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது.
கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது என்று தெரிவித்த டிரம்ப் நிர்வாகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
பல்கலைக்கழகத்திற்கான நிதியை நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.